பொதுமக்களுடன் கவர்னர்கள் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மாநில அரசுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள், கவர்னர்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
பொதுமக்களுடன் கவர்னர்கள் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி,

மாநில அரசுக்கு வழிகாட்டியாக கவர்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ஜனாதிபதி மாளிகையில், கவர்னர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாட்டில், பேசிய ஜனாதிபதி, கவர்னர்களின் பொறுப்புகளை பற்றி விவாதிக்கும்போது, நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில அரசுக்கும், பொதுமக்களுக்கும் நண்பனாக, வழிகாட்டியாக கவர்னர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதில் கவர்னர்களின் பங்கு முக்கியமானது. உங்கள் மாநிலத்து மக்களுக்கு சேவை செய்யவும், நலன்களை காக்கவும் நீங்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

ஆகவே, பொதுமக்களுக்காக உங்களால் முடிந்த அளவு நேரத்தை ஒதுக்குங்கள். பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும். சில நிகழ்ச்சிகளுக்காக உங்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், அங்குள்ள கிராமங்களுக்கும் சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தில் நாம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் கவர்னர்கள் தீவிர பங்கெடுத்துக் கொண்டனர். கொரோனாவுக்கு எதிராக உலகிலேயே மிகப்பெரிய, உறுதியான போர், பிரதமர் மோடி தலைமையில் நடந்து வருகிறது.

மத்திய அரசின் முன்முயற்சிகள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோரின் முயற்சிகளால் தடுப்பூசி உருவாக்கியதுடன், பெரிய அளவில் உற்பத்தி செய்துள்ளோம்.

110 கோடி தடுப்பூசிகளை செலுத்தி, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேகமாக நடைபோட்டு வருகிறோம். மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி வினியோகித்துள்ளோம். இதற்காக உலகம் நம்மை பாராட்டி வருகிறது என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com