

புதுடெல்லி,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.
ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர்.
மேலும் இரு தரப்பினரும் கம்பு, தடிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது.
தலைநகரை உலுக்கிய இந்த பெரும் வன்முறை நேற்று முன்தினமும் நீடித்தது. கடைகளை சூறையாடியும், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது கற்களை வீசியும் வன்முறையாளர்கள் ருத்ர தாண்டவம் ஆடினர். இதனால் வடகிழக்கு டெல்லி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
இந்த கொடூர வன்முறையில் நேற்று முன்தினம் வரை 13 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். உயிரிழந்தவர்களில் டெல்லி போலீஸ் ஏட்டு ஒருவரும் அடங்குவார்.
இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடி ஊரடங்கு போன்ற நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு பேட்டரி கடை நேற்று காலையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த பேட்டரிகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. இது வன்முறையாளர்களின் சதியாக இருக்கக்கூடும் என தெரிகிறது. இதைப்போல ஏற்கனவே வன்முறை பாதித்த பகுதிகளிலும் ஆங்காங்கே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நேற்றும் தலைகாட்டின.
இதைத்தொடர்ந்து வன்முறை பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் சந்த்பாக், ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
டெல்லியில் வன்முறை அதிகரித்ததற்கு போலீசாரின் மெத்தனமும் ஒரு காரணம் என கூறப்படும் நிலையில், அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் 5 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால், ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், வன்முறை பாதித்த ஏராளமான மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். டெல்லியில் நிலைமை மோசமாக உள்ளது. நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த போதும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே உடனடியாக ராணுவத்தை வரவழைப்பதுடன், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ள ஆம் ஆத்மி கட்சி, இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளது.