

சென்னை,
வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தில் மாதம் ரூ.1,800-க்கு மேல் பங்களிப்பு செலுத்துவது இனி விருப்பத் தேர்வாக இருக்கும். அதேபோல், பி.எப். கணக்கில் உள்ள தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக பெறுவதற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 8 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 12 சதவீத பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். அதன்படி, ஊழியரும் நிறுவனமும் தலா அதிகபட்சம் ரூ.1,800 வரை மாதந்தோறும் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
இந்த வரம்புக்கு மேல் செலுத்தப்படும் தொகை விருப்பப் பங்களிப்பாக கருதப்படும். இதனால், ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இருக்கும். அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தாங்கள் விரும்பும் அளவில் கூடுதல் தொகையை பி.எப். கணக்கில் செலுத்தலாம்.
அதேபோல், நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். இருப்பினும், அது கட்டாயமாக இருக்காது.
புதிய விதிகளின்படி, ஊழியர் அல்லது நிறுவனம் விருப்பப் பங்களிப்பை எந்த நேரத்திலும் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும். இதன் மூலம், உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை தேவைக்கேற்ப திட்டமிட்டு நிர்வகிக்கும் வசதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பி.எப். கணக்கிலிருந்து முன்பணமாக பணம் எடுக்கும் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு பணம் எடுக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்புகளும் அடங்கும். இருப்பினும், உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடரும்.