ரெயில் டிக்கெட் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது

ரெயில் புறப்படுவதற்கு முன்னர் 8 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் அதற்குரிய கட்டணம் திருப்பித் தரப்படாது.
ரெயில் டிக்கெட் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது
Published on

ரெயில் பயணம் வசதியானதாகவும் மலிவானதாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் முதல் விருப்பமாக ரெயில் போக்குவரத்து இருக்கிறது. ஊருக்கு செல்வது உறுதியாகிறதோ இல்லையோ முதலில் ரயிலில் டிக்கெட் எடுத்து வைத்து பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரெயில் டிக்கெட்டை ரத்து செய்வதில் இந்திய ரெயில்வே புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் இன்று முதல் (ஏப்.1) அமலுக்கு வருகின்றன. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

*ரெயில் புறப்படுவதற்கு முன்னர் 8 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் அதற்குரிய கட்டணம் திருப்பித் தரப்படாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரத்து செய்யவேண்டும்.

*பயணச்சீட்டை ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.

*ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர்த்து பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும்

*ரெயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே தற்போதுள்ள நடைமுறையின்கீழ் முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.

*இதனுடன்,ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை பயணிகள் தாங்கள் ரயில் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ள இந்திய ரயில்வே அனுமதித்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, அட்டவணை வெளியாவதற்கு முன்புவரை பயணிகள் ஏறும் நிலையத்தை மாற்றிக்கொள்ள முடியும். ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் நடைமுறையால், தரகர்கள் டிக்கெட்டுகளை அபகரிப்பது கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com