

புதுடெல்லி,
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ந்தேதி இரவில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்தது. அதேசமயம் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டன. அதன்படி இரு நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
முதலில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பின்னர் இரு நாடுகளின் தூதரக அளவிலான பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 24ந்தேதி நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து முன்னர் ஒப்புக்கொண்ட புரிந்துணர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவது எல்லையில் அமைதியை உறுதிப்படுத்த உதவும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று எல்லைப் பிரச்சினை குறித்து இந்திய, சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இன்று நடைபெற்ற முக்கிய பொது மட்ட பேச்சுவார்த்தைகள் இரவு 7:30 மணியளவில் முடிவடைந்தன.
இதில், கிழக்கு லடாக்கில் உள்ள தவுலத் பெக் ஒல்டி, தெப்சங் ஆகிய முக்கிய பகுதிகளில் ராணுவப் படைகளை விலக்குவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாக இந்திய ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தவுலத் பெக் ஒல்டி பகுதியில் சீன எல்லைக்குள் இருக்கும் இடத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் இரு ராணுவங்களையும் சேர்ந்த மேஜர் ஜெனரல் மட்டத்திலான உயரதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.