

புதுடெல்லி,
அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிக்குள் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கு சென்ற இந்திய ராணுவம் சீனாவின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது. இந்த நிலையில், சீன துருப்புகள் இந்திய பிராந்தியத்திற்குள் நுழைந்த விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த பிபின் ராவத் கூறியதாவது:-
இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அருணாசலப் பிரதேச சம்பவத்துக்கு தீர்வு காணப்பட்டு விட்டது.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்காலாம் பகுதியில் முன்பு இருந்ததை விட தற்போது சீனப் படையினரின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது என்றார்.
சர்ச்சை ஏன்?
முன்னதாக, அருணாசலப் பிரதேச மாநிலத்தின் டுட்டிங் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனாவின் சாலை அமைக்கும் ஊழியர்கள் அண்மையில் ஊடுருவினர். அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்துடன் அவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் சீன படைப்பிரிவினரும் வந்திருந்தனர்.
அப்போது அவர்களை, அங்கிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், சீனப் பகுதிக்கு அவர்களை மீண்டும் திருப்பியனுப்பினர். இதைத் தொடர்ந்து, சாலை அமைப்பதற்காக கொண்டு வந்திருந்த உபகரணங்கள், பொக்லைன் வண்டிகள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு சீனாவுக்கு அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். #BipinRawat | #Doklam