

டெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள 12 மத்திய மந்திரிகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
12 மத்திய மந்திரிகளில் கேபினெட் மந்திரிகளாகவும், இணை மந்திரிகளாகவும் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் மந்திரி பதவி நீக்கப்பட்டு புதியவர்கள் கேபினெட் மந்திரிகளாகவும், இணை மந்திரிகளாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் சிலர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, டெல்லி, பஞ்சாப், அரியானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்களாக மந்திரி சபையில் இடம்பெற்றுள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, மத்திய மந்திரி சபையில் இருந்து கேபினெட் மந்திரிகள், இணை மந்திரிகள் 10 முதல் 12 பேர் மந்திரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மந்திரி சபையில் இடம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் 15ம் தேதி அல்லது 18ம் தேதி மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மந்திரி சபையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மேல்சபைபதவிகாலம் முடியவுள்ள பல மந்திரிகள் கட்சி பொறுப்புக்கு மாற்றப்பட உள்ளனர். 70 வயதிற்கு மேற்பட்ட மந்திரிகள் மற்றும் சில மேல்சபை எம்.பி.க்கள் ஆகியோர் இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையிலும், மாநில சட்டபை தேர்தல்களை கருத்தில் கொண்டும் மந்திரி சபையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.