கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரிக்கும் காங்கிரஸ் மண்ணை கவ்வ வேண்டும் - யோகிஆதித்யநாத்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரிக்கும் காங்கிரஸ் மண்ணை கவ்வ வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரிக்கும் காங்கிரஸ் மண்ணை கவ்வ வேண்டும் - யோகிஆதித்யநாத்
Published on

மன்னிக்காது

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் 2-வது முறையாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். சிக்கமகளூருவில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் யோகிஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒரே நாடு, வளமான நாட்டை விரும்பாதவர்கள் பி.எப்.ஐ. போன்ற சமூக விரோத, தேச விரோத அமைப்புகளை ஆதரிக்கிறார்கள். அதே நேரத்தில் சமூக சேவை ஆற்றும் தேசபக்தியுள்ள அமைப்புகளை தடை செய்வதாக சொல்கிறார்கள். பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறியுள்ள காங்கிரஸ் இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்ய முயற்சி செய்கிறது. இதை இந்து சமூகம் மன்னிக்காது, ஏற்றுக்கொள்ளாது.

மண்ணை கவ்வ வேண்டும்

500 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரத்திற்கு அதிகார கோஷத்தால் தீர்வு காணப்பட்டுள்ளது. ஜெய்காரா வீர் பஜ்ரங்கி, ஹர் ஹர் மகாதேவ் முழக்கத்தை நீங்கள் கூற வேண்டும். இந்த முழக்கத்தை நீங்கள் வீடு தோறும் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரிக்கும் காங்கிரசார் மண்ணை கவ்வ வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் ஆட்சியின்போது பி.எப்.ஐ. அமைப்பை ஊக்குவித்தனர். இரட்டை என்ஜின் அரசின் நடவடிக்கையால் இங்கு அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை போல் கர்நாடகமும் அமைதியான மாநிலமாக மாறியுள்ளது. அந்த பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்து இரட்டை என்ஜின் அரசு அதன் முதுகெலும்பை உடைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் கர்நாடக மக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு யோகிஆதித்யநாத் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com