கேரளாவில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மலையாள நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

கேரள காங்கிரஸ் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூடத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்,
மலையாள நடிகை மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளரான ரினி அன் ஜார்ஜ், ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் தன்னிடம் ஆபாசமாகவும், எல்லை மீறியும் மெசேஜ் அனுப்பியதாக குற்றம்சாட்டினார். அவர் ஹோட்டலுக்கு அழைத்ததோடு, இதை கட்சி தலைமைக்கு தெரிவிப்பேன் என எச்சரித்தபோதும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களும் இதேபோன்ற தொல்லைகளை சந்தித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், நடிகை ஹனி பாஸ்கரனும் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்துக்கு எதிராக பாலியல் புகார் அளித்தார். பல பெண்கள் புகார் அளித்தும், கட்சியினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால், பாலக்காட்டில் ராகுல் மம்கூடத்தின் அலுவலகத்தை நோக்கி பாஜக போராட்டம் நடத்தி, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதீஷன், இதுவரை கட்சிக்கு ஒரே ஒரு புகாரே வந்துள்ளதாகவும், யாரேனும் குற்றவாளி என்று உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.ஏற்கனவே, திரையுலகில் நடிகைகள் முன்வைத்த பாலியல் புகார்கள் கேரளாவை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், தற்போது அரசியல் பிரமுகர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, அவர் இளைஞரணி மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.






