

கோலாலம்பூர்: இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா பயணச் சலுகையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் கட்டாயம் விசா பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.
இதன்படி, மலேசியாவுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவை பெற்றிருக்க வேண்டும். இதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய விசா விண்ணப்பங்களை, இந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் 'MyVISA' இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
இதற்கிடையே, விசா விண்ணப்ப நடைமுறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 7 வேலை நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும். கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறை, செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். விண்ணப்பம் காலாவதியானால், புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படாது என்றும் மலேசிய குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.