பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அதிபர்

மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரை சீனாவில் இருந்து அழைத்து வந்ததற்காக மாலத்தீவு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அதிபர்
Published on

புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்காக இந்திய அரசு சார்பில் சீனாவிற்கு சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டன.

முதல்கட்டமாக சீனாவில் வுகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வுகான் பகுதியில் இருந்து 323 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இந்த விமானத்தில் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாலத்தீவைச் சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வந்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

சீனாவின் வுகானில் வசிக்கும் மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரை விரைவாக அழைத்து வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செயல் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com