

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் மோடி அரசு இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகளை கைவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தனது தோல்விகளை அம்பலப்படுத்தும் முக்கியத் தரவுகளையும் மத்திய அரசு வேண்டுமென்றே மறைக்கிறது.
சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மூலம் பா.ஜ.க.வின் தோல்விகள் அம்பலமாகியுள்ளன.
* 5 குழந்தைகளில் 1 குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
* மூன்றில் ஒரு பங்கு இந்திய குழந்தைகள், எடை குறைவாக உள்ளனர். 6 முதல் 23 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 84%-க்கும் அதிகமானோர் போதுமான ஊட்டச்சத்தைப் பெறுவதில்லை.
* தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 57% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பெண்களில் 1 பெண் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. தனது தோல்விகளை மறைக்க 5 தந்திரங்களை பயன்படுத்துகிறது;-
* முக்கியமான தரவுகளை மறைத்தல்
* பாதிக்கப்பட்டவர்களைக் கைவிடுதல்
* அனைவருடனும் இருப்போம், அமிர்த காலம் வரப்போகிறது என விளம்பரப்படுத்துதல்
* செய்திகளை திரித்து கூறுதல்
* எந்த விலை கொடுத்தாவது மோடியின் செல்வாக்கை பாதுகாத்தல்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.