

கொல்கத்தா,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக சக தேர்தல் ஆணையர்கள் எழுதிய கடித விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியது.
தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ள மம்தா பானர்ஜி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்காளம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு (SIR) பிறகு பா.ஜ.க. வெற்றி பெற்ற பிற மாநிலங்களிலும் புதிய சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் வங்காள சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் சூறையாடியது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு தனிப்பட்ட முறையில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனும் ஒருமனதாகவுமே எடுக்கப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.