

புதுடெல்லி
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என கடந்த 15-ந்தேதி பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இதில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜியின் அரசியல் கோட்டையாக கருதப்படும் பவானிபூர் தொகுதியில், பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். எனினும், என்னுடைய விருப்பத்திற்குரிய நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுவேன் என சுவேந்து அதிகாரி கூறினார்.
இதேபோன்று 291 தொகுதிகளுக்கான திரிணாமுல் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலை மம்தா பானர்ஜி வெளியிட்டார். அவர் பவானிபூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி சுகந்த மஜும்தார், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜிக்கு தைரியமில்லை. கடந்த தேர்தலில் அவர் இந்த தொகுதியில் தோல்வியை தழுவினார்.
அதனால் இந்த முறை அந்த தொகுதியில் இருந்து போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. இந்த தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவுவார். இதனால், மம்தா பானர்ஜியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும். இந்த முறை, பொதுமக்கள் அவருடைய கட்சியை முற்றிலும் அழிக்க போகிறார்கள் என்றார்.
கடந்த 2021-ம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அதிகாரி, அப்போது அந்த தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தாவை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால், பவானிபூர் இடைத்தேர்தலில் பிரியங்கா திப்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். இந்த முறை 4-வது முறையாக தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மம்தா பானர்ஜி உள்ளார்.