பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு தாமதமாக வந்த மம்தா - வேறு கூட்டம் இருப்பதாக கூறி உடனடியாக வெளியேறினார்

யாஷ் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, கவர்னர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு தாமதமாக வந்த மம்தா - வேறு கூட்டம் இருப்பதாக கூறி உடனடியாக வெளியேறினார்
Published on

கொல்கத்தா,

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.

புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், யாஷ் புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மேற்குவங்காளத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர். மாநில அரசு தரப்பில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறைக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஜக்தீப் மற்றும் மத்திய அரசின் பிற அதிகாரிகள் அனைவரும் திட்டமிட்ட நேரத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஆனால், அந்த கூட்டத்திற்கு மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் மற்றும் மாநில அரசு சார்பில் பங்கேற்க வேண்டிய அதிகாரிகள் மிகவும் காலதாமதமாக வந்தனர். மம்தா பானர்ஜி மற்றும் மாநில தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்றும் அலுவலகத்திலேயே இருந்த போதும் அந்த அறைக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் காலதாமதத்திற்கு பின்னர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு தரப்பினர் கூட்டம் நடைபெறும் அறைக்கு வந்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் யாஷ் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெறும் அந்த அறைக்கு 30 நிமிடம் தாமதமாக வந்த மம்தா பானர்ஜி சிறிது நேரம் (15 நிமிடம்) அந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நீண்டநேர ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காமல் தான் கொண்டுவந்த புயல் பாதிப்பு தொடர்பான தரவுகள் மற்றும் விவரங்களை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

பின்னர் வேறு சில கூட்டங்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுவதாக பிரதமர் மோடியிடம் கூறிய மம்தா பானர்ஜி கூட்டம் நடைபெற்றவிருந்த அறையை விட்டு வெளியேறினார். மம்தா பானர்ஜியுடன் சேர்த்து தலைமை செயலாளர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் வெளியேறினர்.

மம்தா பானர்ஜி கூட்டத்தை விட்டு வெளியேறியதால் பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் மற்றும் பிற அதிகாரிகள் மாநில அரசின் முதல்மந்திரி மற்றும் அதிகாரிகள் இல்லாமல் தனியாக ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிகழ்வு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானதாக உள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com