

கொல்கத்தா
மேற்கு வங்காள மாநிலத்திலும் முன்கள பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்
முன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.குறைவான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மாநில அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என நினைக்கிறது. தேவைப்பட்டால் அதற்கான நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ள மேற்கு வங்காள அரசு தயாராக இருக்கிறது என கூறினார்.
இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறும் போது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குறைவான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு அனுப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியது ஆதாரமற்றது. மம்தா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்.
அவர் எல்லாவற்றையும் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும். எந்தவொரு மாநிலமும் இதுபோல் புகார் செய்யவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அவர் பிரச்சினையை அரசியல் மயமாக்க முயற்சிக்கிறார் என கூறினார்