கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று ‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று ‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா வலியுறுத்தல்
Published on

கொல்கத்தா,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடி உள்ளார்.

இதையொட்டி அவர் நேற்று கூறியதாவது:-

சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறபோது, தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்காக மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போதைய நிலைமைக்கு அவர்தான் காரணம். 2021-ம் ஆண்டின் நிர்வாக திட்டமிடலுக்கு அவர் எதையும் செய்யவில்லை. குஜராத் நிலமையை பாருங்கள்.

பா.ஜ.க.வால் குஜராத்தில் கூட கொரோனா வைரஸ் அதிகரிப்பை சமாளிக்க முடியவில்லை. அத்தகைய ஒரு நெருக்கடியான சூழலுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அவர் கொண்டு வந்து விட்டார்.

யார் பொறுப்பு?

மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு மேற்கு வங்காளம் 5.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை பிரதமரிடம் கேட்டது. ஆனால் அதற்கு பிரதமரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.

இதையொட்டி பிரதமருக்கு ஒரு வலுவான கடிதத்தை நான் எழுதுவேன்.

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கும், வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. யார் இதற்கு பொறுப்பு ஏற்பது?

உயிர்க்காப்பு பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை மராட்டிய அரசு எழுப்பி உள்ளது. ஆனால் இந்தப் பிரச்சினையை கவனிக்காமல், நீங்கள் (மோடி) மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வருகிறீர்கள்.

சொந்த செல்வாக்கை வளர்க்க

80 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறீர்கள். நீங்கள் உலகில் மற்றவர்களுக்கு உதவுவதில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் முதலில் மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வழங்குங்கள். ஆனால் இதையெல்லாம் செய்யத்தவறி விட்டு, உலக சமூகத்தில் உங்கள் செல்வாக்கை வளர்ப்பதில்தான் கவனத்தை செலுத்துகிறீர்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com