

கொல்கத்தா,
ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது வரை ஆபரேஷன் கங்கா மூலம் ருமேனியாவிலிருந்து 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டுத் திரும்பியுள்ளனர்.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் ருமேனியா, ஹங்கேரி வாயிலாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது, பொதுவெளியில் நடமாடக் கூடாது. இந்தியர்களுக்காக உக்ரைன் அரசு இலவச ரயில்சேவைகளை இயக்க உறுதி அளித்துள்ளது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.