

இடுக்கி,
கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் தீயில் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நித்யாவும், இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே கஜானாபாறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரும் காதலித்து வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து நிஷாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நித்யா திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நிஷாந்த் அவரை எரித்துக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
நித்யா கடந்த 12-ந்தேதி போடியில் இருந்து இடுக்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நிஷாந்த் தனது ஆட்டோவில் பாம்புலா அணைக்கட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நித்யா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு நிஷாந்த் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நிஷாந்த் நித்யாவின் கழுத்தை நெரித்ததுடன், அவர் மயங்கி விழுந்ததும் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளார். பின்னர் ஆட்டோவில் இருந்த பெட் ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டு நிஷாந்த் தப்பி சென்றுள்ளார்.
ஏற்கனவே காதலித்து வந்தபோது நிஷாந்த், நித்யாவை பல முறை துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர். திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை வாலிபர் கொடூரமாக கொலை செய்த சம்ப வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.