டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.3.71 கோடி மோசடி - ஒருவர் கைது

மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் போல நடித்து மூதாட்டியிடம் ஆன்லைனில் விசாரணை நடத்தி உள்ளார்.
மும்பை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மும்பையை சேர்ந்த மூதாட்டியிடம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் ரூ.3.71 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் 68 வயது மூதாட்டியை, கடந்த ஆகஸ்ட் மாதம் கொலபா போலீஸ் நிலைய அதிகாரி என ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், உங்களது வங்கிக்கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறினார். இதையடுத்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் என பேசிய கும்பல் மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து ரூ.3 கோடியே 71 லட்சத்தை மோசடி செய்தனர்.
மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் போல நடித்து மூதாட்டியிடம் ஆன்லைனில் விசாரணை நடத்தி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மூதாட்டியிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 71 லட்சம் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் கமிஷனுக்காக வங்கியில் கணக்கு தொடங்கி அதை மோசடி கும்பல் பயன்படுத்த வழங்கியது தெரியவந்தது.
இதற்காக அவருக்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் வெளிநாட்டில் உள்ளதாகவும், மோசடியில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.






