இன்ஸ்டாகிராமில் பழகி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை அவர் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் பழகி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் விஜயநகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 14 வயதான ஒரு சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 34 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவியிடம் இருந்து செல்போன் எண்ணை கேட்டு பெற்ற அந்த நபர், தொடர்ந்து மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் அந்த மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை அவர் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.

பின்னர் அவர் அந்த வீடியோவை காட்டி அடிக்கடி மாணவியை மிரட்டி தனது வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். பின்னர் அவர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி மாணவியின் தோழிகளை அழைத்து வருமாறு வற்புறுத்தினார். அதன்பேரில் அந்த மாணவி மிரட்டலுக்கு பயந்து தனது தோழிகள் 2 பேரை அந்த நபரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அதையடுத்து அந்த 2 மாணவிகளையும், அந்த நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையும் அவர் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்.

அதன்பின் அவர் 3 மாணவிகளையும் மிரட்டி மேலும் சில மாணவிகளை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்து வருமாறு கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் பதறிப்போன 3 மாணவிகளும் இப்பிரச்சினை குறித்து தங்களது பெற்றோரிடம் கூறினர்.

உடனே அவர்கள் இதுபற்றி மகளிர் அமைப்பு மூலம் விஜயநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிந்து அந்த நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com