இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

வாட்ஸ்-அப் உரையாடல்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திருச்சூர்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தெற்கு வாழைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிராஜ்(வயது 26). இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், இளம்பெண்ணிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி வந்தார். தொடர்ந்து இளம் பெண் திடீரென்று அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் செல்போனில் இளம்பெண் பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண், திருச்சூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான அவரை வலைவீசி தேடிவந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக திருச்சூர் கோர்ட்டு அறிவித்தது.
இந்தநிலையில் எர்ணாகுளம் நகரில் உள்ள ஒரு விடுதியில் சிராஜ் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் இரிஞ்சாலக்குடா முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






