மராட்டியம்: 18 ஆட்டோக்களை திருடிய நபர் கைது

போலீசாரிடம் மாட்டாமல் இருக்க வாகன எண்களை அழித்திருக்கிறார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நவி மும்பை பன்வெல் போலீசார் அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் ஒருவர் சுற்றித்திரிவதை போலீசார் கண்டனர். அவரை ஏற்கனவே சிசிடிவி காட்சிகளில் பார்த்ததால் அவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றார். 4 கி.மீ துரத்திச்சென்று உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர் பன்வெல் பகுதியில் வசிக்கும் நிகார் கான் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின.
அவர் கடந்த ஒரு வருடமாக ஆட்டோக்களை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என தெரியவந்தது. திருடிய வாகனத்தை புல்தானாவில் விற்றதாகவும் அவர் மொத்தம் 18 ஆட்டோக்களை திருடி விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது. பின்னர் போலீசார் குழு புல்தானாவுக்கு சென்று 18 ஆட்டோக்களையும் மீட்டனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தான் போலீசிடம் மாட்டாமல் இருக்க வாகன எண் மற்றும் என்ஜினில் உள்ள எண்களை அழித்திருக்கிறார். இதனால் ஆட்டோவின் உரிமையாளர்கள் யார் என கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






