

பெரும்பாவூர் :
கேரள உயர் ஐகோர்ட்டில் கடந்த வாரம் முதல் நேரடியான வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. வழக்குகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரு ஆன்லைன் விசாரணையில், நீதிபதி வீ. ஜி.அருண் நடத்திய ஒரு வழக்கு விசாரணையின்போது குளியலறையில் சேவ் செய்த படி ஒரு நபர் வழக்கில் ஆஜராகி இருந்தார் .
இதனை நீதிபதியின் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த சம்பவம் வெளியானதை அடுத்து உடனடியாக இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேரள ஐகோர்ட்டு தனி பெஞ்ச் நீதிபதி வீ. ஜி.அருண் உத்தரவிட்டுள்ளார் .
இதேபோன்று கடந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையில் ஒரு நபர் மேல் சட்டை அணியாமல் நீதிமன்ற ஆன் லைன் விசாரணையில் ஆஜராகி இருந்தார்.
அப்போது இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அப்போதைய தனி பெஞ்ச் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் , நீதிமன்ற விசாரணையின் போது அதற்குரிய மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சாதாரண மரியாதையை கூட கடைப்பிடிக்க மறந்து இதுபோல ஆஜராவது தவறு என்றும் சுட்டிக் காட்டியதுடன், இங்கு நடை பெறுவது சர்க்கசோ அல்லது வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளோ இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.