தாத்தாவின் 500 ரூபாய் முதலீட்டால் லட்சாதிபதியான பேரன்

1994-ம் ஆண்டு ரூ.500 முதலீடு செய்த நிலையில், தற்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தாத்தாவின் 500 ரூபாய் முதலீட்டால் லட்சாதிபதியான பேரன்
Published on

சண்டிகர்,

சண்டிகரில் வசிக்கும் டாக்டர் தன்மய் மோதிவாலா. இவர் வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் எஸ்.பி.ஐ. வங்கியின் மிகப்பழைய பங்கு சான்றிதழ் ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதில் 1994-ம் ஆண்டு ரூ.500 மதிப்புள்ள எஸ்.பி.ஐ. பங்குகளை டாக்டரின் தாத்தா வாங்கி வைத்துள்ளார். மேலும் தன்னிடம் எஸ்.பி.ஐ. பங்குகள் இருப்பதையே டாக்டரின் தாத்தா மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இதுகுறித்து டாக்டர் தன்மய் மோதிவாலா,

குடும்ப சொத்துக்களை எடுக்கும் போது இந்த சான்றிதழ்கள் கிடைத்ததாகவும், டிவிடெண்ட் தனியாக வந்துள்ளது போக தற்போது இதன் மதிப்பு ரூ.3.75 லட்சம் எனவும், இது பெரிய தொகை இல்லை என்றாலும், 30 ஆண்டுகளில் 750 மடங்கு லாபம் என்பது உண்மையில் பெரியது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பங்குகள் அனைத்தும் நிச்சயம் டிமேட் கணக்குகளில்தான் இருக்க வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த பங்கு சான்றிதழை உரிய ஆலோசகர் உதவியுடன் டிமேட் பங்குகளாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கையெழுத்து, முகவரி என பல சிக்கல் இருந்ததால் இதை டிமேட் பங்குகளாக மாற்ற பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பங்குகளை அவர் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். தற்போது பண தேவை இல்லை என்பதால் அதை விற்க போவதில்லை என அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது ஸ்டோரி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

1994-ம் ஆண்டு ரூ.500 முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடு செய்வதில் இருக்கும் பலன் குறித்து இந்த நிகழ்வு காட்டுகிறது என சமூகதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com