

குருகிராம்,
பீகாரைச் சேர்ந்த விஜய் சஹானி (30 வயது) என்ற நபர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போன்ட்சி சிறையில் அடைக்கப்பட்டார். விஜய் சஹானி சிறையில் இருந்தபோது, அவரது மனைவி விஜய்யின் தம்பியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த விஜய், அவரது மனைவி தனது தம்பியை திருமணம் செய்து கொண்டதை அறிந்து ஆத்திரமடைந்தார். அவர்களது வீட்டுக்கு சென்ற விஜய், அவரது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர்களது 7 மாத பெண் குழந்தையை தூக்கிச்சென்ற விஜய், ஆத்திரத்தில் தரையில் வீசி கொன்றுவிட்டு தப்பியோடினார்.
இந்த நிலையில் நேற்று காலை நாதுபுரா கிராமப் பகுதியில், சுயநினைவின்றி கிடந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், விஜய் சஹானியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.