அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே புகையிலை மென்று தின்ற வாலிபர் கொலை; வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

கொலையான ஹர்மன்ஜீத் சிங் பொற்கோவில் அருகே புகையிலையை தின்று கொண்டிருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே புகையிலை மென்று தின்ற வாலிபர் கொலை; வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ள ஹர்மந்திர் சாகிப் பகுதியில் சந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த சந்தை அருகே ஒரு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 பேர் அந்த வாலிபரை வாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றபோதிலும் யாரும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் அந்த இடத்திலேயே கிடந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

கொலை குறித்து நேற்று காலை தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த ஹர்மன்ஜீத் சிங் (வயது 22) என்பது தெரியவந்தது.

போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹர்மன்ஜீத் சிங் படுகொலையை ஏராளமானோர் வேடிக்கை பார்த்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் ஹர்மன்ஜீத் சிங்கை தாக்கிய வாலிபர்களின் அடையாளங்களும் அதில் தெரிந்தது. அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் இந்த கொலை தொடர்பாக ரமன்தீப் சிங் என்பவரை கைது செய்தனர்.

கொலையான ஹர்மன்ஜீத் சிங் மது அருந்தி விட்டு அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நின்று புகையிலையை மென்று தின்று கொண்டிருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் ஹர்மன்ஜீத் சிங் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமன்தீப் சிங்கிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com