குழந்தை இல்லாத தனது மாமாவிற்கு பரிசளிப்பதற்காக சிறுவனை கடத்திய நபர் கைது

குழந்தை இல்லாத தனது மாமாவுக்கு பரிசளிக்க சிறுவனை கடத்திய 21 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
குழந்தை இல்லாத தனது மாமாவிற்கு பரிசளிப்பதற்காக சிறுவனை கடத்திய நபர் கைது
Published on

புதுடெல்லி,

குழந்தை இல்லாத தனது மாமாவுக்கு பரிசளிக்க சிறுவனை கடத்திய 21 வயது இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது,

டெல்லியின் கௌதம்புரி என்ற பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் காணாமல் போனான். இரண்டு நாட்கள் சிறுவனைத் தேடிய பிறகு அவனது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

விசாரணையின் போது, புகார் தாரரின் பக்கத்து வீட்டுக்காரரான நீரஜ் என்பவரும் அன்றைய தினம் இரவு அந்த இடத்தை விட்டுச் சென்றதாகவும், மறுநாள் காலை வரை திரும்பி வரவில்லை என்றும் தெரியவந்தது.

அந்த நபரை கண்டுபிடித்து விசாரித்ததில், அவர் குழந்தையைக் கடத்திச் சென்று அலிகாரில் உள்ள அவரது தாய் மாமா சுனித் பாபுவின் இல்லத்தில் தங்கவைத்திருந்தது தெரியவந்தது.

தனது மாமாவின் மனைவிக்கு நான்கு மகன்கள் பிறந்ததாகவும், ஆனால் அவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும், அதனால்தான் சிறுவனை மாமாவிடம் ஒப்படைப்பதற்காக அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், அந்த நபரையும் அவரது மாமாவையும் கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com