கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்கொல்லி புலி பிடிபட்டது

மனிதர்களை குறிவைத்து தாக்கி கொல்லும் புலியை பிடிக்க பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
மலப்புரம்,
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிகாவு பகுதியை சேர்ந்த கபூர் (வயது 45) என்ற ரப்பர் தோட்ட தொழிலாளியை கடந்த மே மாதம் புலி தாக்கி கொன்றது. மேலும், அவரது உடலை 200 மீட்டர் தொலைவுக்கு காட்டுக்குள் இழுத்து சென்றது.
இது குறித்து அறிந்து வந்த வனத்துறையினர், கபூர் உடலை மீட்டனர். அங்கு திரண்டு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்தோம். ஆனால் அவர்கள் புலியை பிடிக்க முயற்சிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், பந்தேர் சுல்தான் எஸ்டேட் பகுதியில், மனிதர்களை குறிவைத்து தாக்கி கொல்லும் புலியை பிடிக்க பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து, இரவு பகலாக புலியை பல இடங்களில் தேடி வந்தனர்.
கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பு காளிகாவு அருகே ரப்பர் தோட்ட தொழிலாளியை கொன்ற புலி சம்பவம் நடந்த பகுதியை சுற்றி அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் நேற்று அதிகாலையில் சிக்கியது என வனத்துறையினர் தெரிவித்தனர்.