

திருப்பதி,
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயை கொன்றுவிட்டு, 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மாவட்டம் வெங்கடகிருஷ்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (37 வயது). இவரது மனைவி ஹரிதா (35 வயது). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மோகனின் தாய் சந்திரகலா (65 வயது) இவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன் தனது வீட்டில் வைத்து சேலையால் மனைவி மற்றும் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்ற மோகன், அங்கிருந்து குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து இரவு சுமார் 7.15 மணியளவில் வேப்பகுண்டா ரெயில் நிலையம் அருகே சென்ற மோகன், தனது 2 குழந்தைகளுடன் அந்த வழியாக வந்த எழும்பூர் - காச்சிகுடா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து லோகோ பைலட் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை மற்றும் தற்கொலைக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
மோகனுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தனவா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.