

திருப்பதி,
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜநகரம் அடுத்த பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (வயது 32). இவரது மனைவி சியாமளா (30). மாற்றுத்திறனாளிகளான இவர்களுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், இருவரும் திருப்பதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமண் ராவின் தாய் திடீரென மரணமடைந்தார். தாயின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த லட்சுமண் ராவ், அவரது மறைவால் கடும் அதிர்ச்சியடைந்து, கடந்த சில நாட்களாகவே சோகத்தில் மூழ்கி காணப்பட்டார்.மேலும், தனது மனைவியிடம், "அம்மா அடிக்கடி என் கனவில் வருகிறார். அவர் என்னை தன் அருகிலேயே வரும்படி அழைக்கிறார்" என்று கூறி புலம்பி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனமுடைந்த லட்சுமண் ராவ், "அம்மா இல்லாத இந்த உலகத்தில் என்னால் வாழ முடியவில்லை. எனவே நாம் இருவரும் தற்கொலை செய்து கொண்டு, அம்மாவிடமே சென்று விடுவோம்" என்று மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது தற்கொலை முடிவுக்கு மனைவி சியாமளா சம்மதிக்கவில்லை. தற்கொலை எண்ணத்தை கைவிடுமாறு கணவருக்கு அறிவுரை கூறி, அதற்கு அவர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாக பூட்டி கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கணவன், மனைவி இருவரும் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, லட்சுமண் ராவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு 'செல்பி' வீடியோ பதிவாகி இருந்தது. அதில், "தாய் இறந்த துக்கம் தாங்காமல், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக" லட்சுமண் ராவ் உருக்கமாகப் பேசியிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.