'உங்க மேல வழக்கு இருக்கு'.. சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி: ரூ.59 லட்சத்தை இழந்த நபர்


உங்க மேல வழக்கு இருக்கு.. சி.பி.ஐ. அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி: ரூ.59 லட்சத்தை இழந்த நபர்
x

சுங்கத்துறை, சி.பி.ஐ. அதிகாரிகள் என காட்டிக்கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை:

மராட்டிய மாநிலம் தானே நகரை சேர்ந்த 54 வயதுடைய நபருக்கு நவம்பர் 26-ம் தேதி செல்போனில் பல முறை அழைப்பு வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி என கூறி ஒருவர் பல முறை அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய அவர், 'டெல்லியில் உங்கள் பெயரில் ஒரு பார்சல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

'இது குறித்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது, அவர்கள் உங்களிடம் பேசுவார்கள், விசாரணைக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுங்கள்' என்றும் கூறியிருக்கிறார்.

அந்த நபர் கூறியபடி சிறிது நேரத்தில், வேறு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியுள்ளார். 'கடத்தல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் உங்களுக்கு தொடர்பு உள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 59 லட்சம் ரூபாய் கொடுத்தால் இதில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். உங்கள் பெயரை வழக்கில் இருந்து நீக்கிவிடுவோம். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிககை எடுப்போம்' என மிரட்டி உள்ளார். இதனால் அந்த நபர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் பயந்துபோன அவர், எதிர்முனையில் பேசிய நபர் கொடுத்த பல வங்கிக்கணக்குகளில் பணத்தை அனுப்பி உள்ளார்.

எனினும், பணத்தை அனுப்பியபின்னர் அந்த நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை உணர்ந்தார். பின்னர் நவுபாடா போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story