பீர், பிரியாணி கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த நபர்; நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்... அடுத்து நடந்த கொடூரம்


பீர், பிரியாணி கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த நபர்; நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்... அடுத்து நடந்த கொடூரம்
x

நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, 3 பேரையும் வெவ்வேறு இடங்களில் போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கிஸ்மத்பூர் பகுதியில் பாலத்திற்கு அடியில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து ராஜேந்திரா நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, புதருக்கு அருகே கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. புதிய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் பற்றி சைபராபாத் போலீஸ் ஆணையரகம் வெளியிட்ட செய்தியில், யகுத்புரா பகுதியை சேர்ந்த அந்த பெண், ஹைதர்குடா நகருக்கு சென்றார். மதுபானம் குடித்து விட்டு சாலையோரம் மயங்கி கிடந்துள்ளார்.

33 வயது நபர் ஒருவர், அந்த பெண்ணை ஆட்டோவுக்குள் அழைத்து சென்று பீர் மற்றும் பிரியாணி வாங்கி கொடுத்திருக்கிறார். இதன்பின்னர் கூட்ட அரங்கு ஒன்றிற்கு அருகே அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆரம்கார் எக்ஸ் சாலை பகுதியில் இறக்கி விட்டு விட்டு தப்பினார்.

இதனை 25 வயதுடைய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கவனித்து உள்ளனர். டோலி சவுகி பகுதியை சேர்ந்த அவர்கள் அந்த பெண்ணை மயக்கி பேசி, கட்டாயப்படுத்தி கடத்தி சென்று, ஆட்டோவில் ஏற்றினர். கிஸ்மத்பூர் பாலத்திற்கு கீழே மறைவான பகுதிக்கு அழைத்து சென்றனர்.

இதன்பின்பு, அவர்கள் 2 பேரும் மது குடித்து போதையானதும், அந்த பெண்ணை அடுத்தடுத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, அந்த பெண் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். கட்டையை கொண்டு அடித்ததில், அந்த பெண் பலியானார்.

இதனால் பயந்து போன அவர்கள் இருவரும் உடலை புதரருகே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். போலீசார், நாமபள்ளி முதல் ஹைதர் குடா வரையிலான பகுதிகளில் நூற்றுக்கணக்கான சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், 3 பேரையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story