

டாடியா,
மத்திய பிரதேசத்தில் டாடியா நகரில் இகுய் கிராமத்தில் நந்த்ராம் பத்வா (வயது 25) என்பவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை கொண்டாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் உறவினரான திலீப் பத்வா (வயது 30) என்பவர் கொண்டாட்டத்திற்காக இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் ஒரு குண்டு நந்த்ராம் மீது பாய்ந்துள்ளது. மற்றொரு குண்டு கிராமவாசியான கஜேந்திரா குஷ்வாஹா (வயது 38) என்பவரை துளைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். அவர்களில் நந்த்ராம் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கஜேந்திராவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் திலீப் பத்வாவை இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.