மனைவி ருசியாக சமைக்கவில்லை என விவாகரத்து கேட்டு வழக்கு; மேல்முறையீட்டை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

ருசியாக சமைக்காததால் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டவரின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மனைவி ருசியாக சமைக்கவில்லை என விவாகரத்து கேட்டு வழக்கு; மேல்முறையீட்டை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் குடும்ப நல கோர்ட்டில் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குப்பதிவு செய்தார். என்னுடைய மனைவி எவ்வளவு முறை கூறியும் என் பேச்சையும் என்னையுடைய பெற்றோரின் பேச்சையும் மதிக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கிறார். தாமதமாக சமைக்கிறார். அவர் சமைக்கும் உணவில் துளியும் சுவை இல்லை. காலையில் அவரை யாராவது எழுப்ப முயன்றால் அவர்களிடம் மிகவும் கடினமாக நடக்கிறார். அதுவும் வேலையில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் நாட்களில் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தரமறுக்கிறார். எனக்காக நேரம் ஒதுக்க மறுக்கிறார். எனவே என் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்கவேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் குறுப்பிட்டு இருந்தார்.

வேலையில் இருந்து வந்ததும் என்னுடைய மகள் தூங்குகிறார், மாலை 6 மணிக்கும் தூங்குகிறார். இரவு உணவு தயாரிப்பது 8:30 மணியளவில்தான் என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை மனுவில் அடுக்கியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அவருடைய மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காலை வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவும், வேலைக்கு சென்றுவந்த பின்னரும் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சமைக்கிறேன். எப்போதும் வீட்டிலும் வேலைதான் பார்க்கிறேன். எல்லோரையும் கவனித்துக் கொள்கிறேன் என கூறிஉள்ளார். மேலும் அவருடைய அண்டைய வீட்டாளர்களிடம் இருந்தும் மனுவை பெற்று தாக்கல் செய்து உள்ளார். அவர்களும் அவருடைய மனைவி எப்போதும் வீட்டு வேலையை செய்துக் கொண்டு இருப்பார், அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது. உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள கணவரின் பெற்றோர்களையும் கவனிக்கிறார் என அறிக்கையை கொடுத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் தாதெட் மற்றும் சாரங் கோட்வால் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிகள் கூறுகையில், மனுதாரரின் மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைப்பதும் கணவரின் சிரிய தேவைகளை பூர்த்தி செய்யாததும் மிகவும் கொடுமையான விஷமாக தெரியவில்லை. இந்த வழக்கில் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று என்வென்றால் அந்த பெண் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர். அவர் வேலையுடன் கூடுதல் சுமையாக காலையும், மாலையும் சமையல் செய்துள்ளார், வேலை முடிந்து வரும் வழியில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

வீட்டு வேலைகளை செய்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அவர் வேலை செய்யவில்லை என்று கூற்றம்சாட்டுவது தவறு என்றனர்.

மேலும் குடும்பநல கோர்ட்டு நீதிபதி, மனுதாரர் ஒவ்வொரு முறையும் தண்ணீர் எடுத்துத்தர கூட மனைவியின் கையை எதிர்பார்ப்பதை கண்டித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com