பசுக்கள் மாயம்; தேடி சென்றவரை மரத்தில் கட்டி வைத்து கையை துண்டித்த குடும்பம்

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன பசுக்களை தேடி சென்றவரை ஒரு குடும்பத்தினர் மரத்தில் கட்டி வைத்து கையை வெட்டி துண்டித்தனர்.
பசுக்கள் மாயம்; தேடி சென்றவரை மரத்தில் கட்டி வைத்து கையை துண்டித்த குடும்பம்
Published on

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கிராமம் ஒன்றில் ராய்சென் பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நாராயண் சாஹூ (வயது 35). இவரது பசுக்கள் காணாமல் போயுள்ளன. இதற்காக அவற்றை தேடி சத்து யாதவ் என்பவரின் பண்ணைக்கு சென்றுள்ளார். உடன் ஒரு வாளையும் கொண்டு சென்றுள்ளார்.

அதன்பின் சத்துவின் வீட்டிற்குள் புகுந்த அவர் அங்குள்ளவர்களிடம் பசுக்களை பற்றி கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி உள்ளனர்.

இந்த சண்டை முற்றிய நிலையில், சத்து மற்றும் அவரது குடும்பத்தினர் சாஹூவை பிடித்து, அடித்து, பண்ணையில் உள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்து உள்ளனர். அதன்பின் அவரது வலது கையை வாளால் வெட்டி துண்டித்தனர். அவரது இடது கையிலும் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது.

சாஹூ வலியால் அலறியபொழுது அவரை காப்பாற்ற கிராமத்தினர் யாரும் முன்வரவில்லை.

அதன்பின்பு கிராமவாசிகள் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அதிக ரத்தம் வெளியேறிய சாஹூ, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடக்கிறார். சிலர் அவரிடம், தாக்குதல் நடத்தியவர்களின் பெயரை கூறும்படி தொடர்ந்து கேட்கின்றனர். அவர் சில பெயரை கூறிவிட்டு தண்ணீர் கேட்கிறார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு சாஹூவை மருத்துவமனையில் சிலர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் ஒரு குடும்பத்தினை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

இந்த சம்பவத்திற்கு பின் பெண் ஒருவர் மொபைல் போன் கேமிராவில் பேசும்பொழுது, சாஹூ வீட்டிற்குள் புகுந்து எங்களை தாக்கினார். அதனால் அவரை நாங்கள் தாக்கினோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com