பிரிந்து சென்ற மனைவியுடன் சேர நரபலி? ஒருவரை கொன்று தலையை பூஜை அறையில் புதைத்த நபர்

3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேருவதற்காக கொலை செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவியுடன் சேருவதற்காக ஒருவரை கொன்று அவரது தலையை பூஜை அறையில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் கண்டெடுப்பு

ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டத்தில் உள்ள தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் கார்செல் (45 வயது). இவரை கடந்த 18-ந்தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் அவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அருகே உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சந்தோஷ் கடைசியாக சத்ருக்னா சாஹு (40 வயது) என்பவருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சத்ருக்னா சாஹுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தோஷை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக முதலில் சாஹு தெரிவித்தார்.

பூஜை அறையில் தலை

சந்தோஷின் தலை குறித்து கேட்டபோது, தனது வீட்டின் பூஜை அறையில் புதைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். அப்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேருவதற்காக சந்தோஷை கொலை செய்து அவரது தலையை துண்டித்து, பூஜை அறையில் புதைத்துள்ளார். உடலை குளத்தில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்தது.

பூஜை அறையிலிருந்த தலையை போலீசார் தோண்டி எடுத்தனர். மேலும் நரபலி கொடுத்த சாஹுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com