மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார். அன்று நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனை யொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயத்தில் பக்தர்களின் நலன் கருதி உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 கட்டமாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு பணிகளுக்காக இந்த ஆண்டு 7,500 போலீசார் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com