சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை: 30-ந்தேதி மீண்டும் நடை திறப்பு

அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை: 30-ந்தேதி மீண்டும் நடை திறப்பு
Published on

சபரிமலை,

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை கோவில்

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

தங்க அங்கி

சபரிமலை கோவில் நடை திறந்து ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவடைந்ததையொட்டி நேற்று அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் கடந்த 23-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து 18-ம்படி வழியாக எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

மண்டல பூஜை

நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து களபாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் அய்யப்பனுக்கு தங்கஅங்கி அணிவித்து மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜையின் போது மேள, தாளங்கள் முழங்க மணி ஓசை மலையெங்கும் எதிரொலிக்க, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியே சரணம் அய்யப்பா என்று சரணகோஷம் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்த பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தங்க அங்கி அணிந்து அலங்கார தீப வெளிச்சத்தில் ஜொலித்த அய்யப்பனின் திருவுருவம் பக்தர்களை பரவசப்படுத்தியதோடு, கண்கொள்ளா காட்சியாகவும் இருந்தது. பிற்பகல் 1.30 மணி வரை தங்க அங்கி அணிந்த சுவாமியை பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். மண்டல பூஜையை தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு அடைக்கப்பட்ட கோவில் நடை, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அய்யப்பனுக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடந்தன. இரவு அத்தாழ பூஜையும், பின்னர் அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

30-ந்தேதி மீண்டும் நடை திறப்பு

மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மண்டல பூஜையையொட்டி நேற்று சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com