சபரிமலையில் நாளை மறுநாள் மண்டல பூஜை: அதிகரிக்கும் பக்தர்கள் வருகை

உடனடி தரிசன முன்பதிவை 15 ஆயிரமாக அதிகரிப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசிக்கபட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளா
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் நேற்று முன் தினம் காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்ட நிலையில், நாளை சபரிமலை சென்றடைந்து 27-ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், "மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந் தேதி முதல் உடனடி தரிசன முன்பதிவை 15 ஆயிரமாக அதிகரிப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

நடப்பு சீசனில் 23-ந் தேதி வரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை 27-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி 26-ந் தேதி (அதாவது நாளை) ஆன்லைன் முன்பதிவு 64 ஆயிரமாகவும், 27-ந் தேதி 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜையையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 26-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும். தொடர்ந்து ஓய்வுக்கு பிறகு தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம் குத்தி வந்தடையும். அங்கு தங்க அங்கி ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

27-ந் தேதி காலை 10.30-11.30 இடையே மண்டல சிறப்பு பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அப்பம், அரவணை வினியோக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினை காரணமாக மராட்டியத்தில் இருந்து வரவேண்டிய 32 டன் சர்க்கரை ஒரு நாள் தாமதமாக வந்தது. இதனால் அப்பம், அரவணை வினியோகத்தில் சிறிய தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், உடனடியாக 500 டன் சர்க்கரை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com