

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
கார்த்திகை 1-ந் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடு நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு பிரம்மதத் தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜையை நடத்துவார்.
கோவிலில் நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். சீசன் தொடக்கம் முதல் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சீசனில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக இதுவரை 50 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்வதற்காக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பாதையான சாலக்காயம் பம்பை சாலை ரூ.14.4 கோடியில் 4 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை கேரள பொதுப்பணித்துறை மந்திரி பி.கே. பஷீர் திறந்து வைத்தார். தேவஸ்தான மந்திரி கே.முரளிதரன் கலந்து கொண்டு சாலக் காயம் முதல் பம்பை வரையிலான மின்விளக்கு வசதியை தொடங்கி வைத்தார்.