கேரளாவில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை

போலீஸ் நிலையத்தின் தினசரி பொறுப்புகளை தற்காலிகமாக மற்றொரு தகுதியான அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும்.
கேரளாவில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை
ஏடிஜிபி பி. விஜயன்
Published on: 

திருவனந்தபுரம்,

கேரள காவல் துறையினருக்கு ஒரு முக்கிய மற்றும் மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. தொடர் பணிச்சுமை மற்றும் கடுமையான மன உளைச்சலில் இருந்து போலீசாரை விடுவிக்கும் நோக்கில், கேரளாவில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்க சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பி. விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுழற்சி முறையில் விடுமுறை

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட அனைத்து தரப்பு போலீசாருக்கும், சேவையின் அவசர தேவைகளுக்கு உட்பட்டு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை முன்கூட்டியே திட்டமிட்டு வழங்கப்பட வேண்டும்.

தினசரி பொறுப்பு

காவல் நிலைய பொறுப்பதிகாரி அல்லது சப்-இன்ஸ்பெக்டர் வாராந்திர விடுமுறையில் செல்லும்போது, போலீஸ் நிலையத்தின் தினசரி பொறுப்புகளை தற்காலிகமாக மற்றொரு தகுதியான அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும்.

குடும்ப விசேஷங்களுக்கு அனுமதி

போலீசாரின் மன அமைதியை உறுதி செய்யும் வகையில், அவர்களின் குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான குடும்ப விசேஷங்களின் போது அவர்களுக்கு விடுமுறை எடுக்க கட்டாயமாக அனுமதி வழங்க வேண்டும். மிக அவசரமான சட்டம்-ஒழுங்கு காரணங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் இந்த விடுமுறையை அதிகாரிகள் மறுக்க கூடாது.

மன அழுத்தம்

தொடர் பணியால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, போலீசார் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இந்த புதிய சுற்றறிக்கை வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறையின் இந்த உத்தரவால் அம்மாநில போலீசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com