

புதுடெல்லி,
பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக புகார் கொடுக்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயேகம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது; 10-15 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 468-ன் கீழ் சிறார்களுக்கு பாலியல் தொல்லை உள்பட எந்தஒரு குற்றத்திற்கும் மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம் உள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 473-ன் கீழ், நீதியின் நலன் அல்லது "தாமதமானதற்கு சரியாக விளக்கம் தெரிவிக்கப்பட்டால்" பழைய வழக்கை நீதிமன்றம் கையில் எடுக்கலாம். இருப்பினும் பாலியல் துஷ்பிரயேகம் போன்ற வன்முறைகளில் பாதிக்கப்படும் சிறார்கள் 18 வயதை எட்டிய பின்னர் புகார் தெரிவித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டியவரும். இப்போது நடிகைகள், செய்தியாளர் என பலர் #MeToo பிரசாரத்தின் மூலம் தங்களுக்கு நேரிட்ட பாலியல் தொந்தரவு சம்பவங்களை பொது வெளியில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாலியல் துஷ்பிரேயகம் தொடர்பாக புகார் கொடுக்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். #MeToo பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரிட்ட சம்பவங்களை வெளியே தெரிவிக்கும் முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, இந்தியாவில் இதுபோன்ற பிரசாரம் தொடங்கியுள்ளது பெண்கள் புகார்களை தெரிவிக்க ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்தவரை பாதிக்கப்பட்டவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனவே எந்தஒரு கால நிர்ணயமும் இல்லாமல் புகார்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம், என மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களால் 10, 15 ஆண்டுகளானாலும் புகார் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும். எவ்வளவு கால தாமதம் என்பது ஒரு பொருள் கிடையாது. புகார் தெரிவிப்பதற்கு அவர்களுக்கான தளம் எப்போது திறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மேனகா காந்தி கூறுகையில், பாலியல் துஷ்பிரயேகங்களில் பாதிக்கப்படும் சிறார்களை 30 வயது வரையில் புகார்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும், என்று வலியுறுத்தியிருந்தார். அதுபோன்று #MeToo பிரசாரத்தினை ஒருவரை இலக்காக்க வேண்டும் என்பதற்கான ஆயுதமாக கையில் எடுக்கக்கூடாது எனவும் மேனகா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.
இவ்விவகாரத்தில் தனுஸ்ரீ தத்தாவிற்கு ஆதரவை தெரிவித்த மேனகா காந்தி, அரசு இதனை சகித்துக்கொள்ளாது என எச்சரிக்கையை விடுத்து இருந்தார்.