மணிசங்கர் அய்யர் மீது மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

பாகிஸ்தானுக்கு போய் கூலிப்படை அமர்த்தி என்னை கொல்வதற்கு மணிசங்கர் அய்யர் முயன்றார் என்று பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
மணிசங்கர் அய்யர் மீது மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

காந்திநகர்,

பிரதமர் நரேந்திர மோடியை இழிபிறவி என்று தரமற்ற வகையில் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர், மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர். இதற்காக அவரை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் குஜராத்தின் வடக்கு பகுதியில், பாபர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மணிசங்கர் அய்யர் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

18-ந் தேதி முடிவு வரும்

அவர் கூறியதாவது:-

திருவாளர் மணிசங்கர் அய்யர் என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

அவர் என்னை அவதூறாக பேசினாரா இல்லை உங்களையா? அவர் என்னை அவதூறாக பேசினாரா இல்லை குஜராத்தை அவதூறாக பேசினாரா? அவர் இந்தியாவின் கலாசார சமூகத்தை அவதூறாக பேசினாரா, இல்லை என்னை அவதூறாக பேசினாரா?

அவர் தவறாக பேசியதுபற்றி நாம் இப்போது பேச வேண்டாம். அதை குஜராத் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். பதில் கொடுப்பார்கள். அவர்கள் வரும் 18-ந் தேதி முடிவை தெரிந்து கொள்வார்கள்.

கூலிப்படை அமர்த்தி...

ஆனால், நான் பிரதமர் பதவி ஏற்ற பிறகு, இந்த மனிதர் (மணிசங்கர் அய்யர்) பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சில பாகிஸ்தானியர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மோடியை அகற்றாத வரையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என்று கூறி இருக்கிறார். இதெல்லாம் சமூக ஊடகங்களில் உள்ளது.

என்னை கொல்வதற்கு கூலிப்படை அமர்த்த அல்லவா நீங்கள் (மணிசங்கர் அய்யர்) விரும்பினீர்கள்?

இதற்காக நீங்கள் (மக்கள்) கவலைப்பட வேண்டாம். தெய்வம் என்னை காத்துக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை

3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த அத்தியாயத்தை மறைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. அவர் (மணிசங்கர் அய்யர்) மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டு மக்கள் என்னை ஜனநாயக ரீதியில் (ஆளுவதற்காக) தேர்ந்தெடுத்தார்கள். நீங்களோ (மணிசங்கர் அய்யர்) பாகிஸ்தான் போகிறீர்கள், இவர் (மோடி) வழியில் வருகிறார், இவரை தீர்த்துக்கட்டுங்கள் என்று சொல்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com