மணிப்பூர்: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 ஊடுருவல்காரர்கள் கைது


மணிப்பூர்:  பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 ஊடுருவல்காரர்கள் கைது
x

இம்பாலில் கடந்த 6-ந்தேதி கம்கின்தங் கேங்தே மற்றும் ஹென்டின்தங் கிப்கென் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், சிலர் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது கடந்த ஆண்டு நடந்த தாக்குதலுடன் தொடர்புடைய 3 ஊடுருவல்காரர்களை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்து உள்ளது.

2024-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி மணிப்பூரின் தெங்னவுபால் மாவட்டத்தின் மோரே பகுதியில், இந்திய ரிசர்வ் பட்டாலியனின் நிலைகள் மற்றும் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு இந்த 3 பேரும் அவர்களுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டி தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இதில், 2 போலீஸ் கமாண்டோக்கள் மரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வந்தது. இதில், கடந்த மே 19-ந்தேதி தங்மின்லென் மேட் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குகி இன்பி தெங்னவுபால் என்ற ஊடுருவல் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அசாமின் சில்சார் பகுதியில் கைது செய்யப்பட்ட அவரை மே 28-ந்தேதி என்.ஐ.ஏ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதன்பின்னர், இம்பாலில் கடந்த 6-ந்தேதி மற்ற குற்றவாளிகளான கம்கின்தங் கேங்தே மற்றும் ஹென்டின்தங் கிப்கென் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

1 More update

Next Story