மணிப்பூர் விவகாரம்; நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதம், அமளி

மணிப்பூர் விவகாரம் பற்றி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் மற்றும் அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.
மணிப்பூர் விவகாரம்; நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதம், அமளி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று 5-வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே எழுந்து பேசும்போது அவரது மைக் அணைக்கப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. இதுபற்றி அவர் அவையில் பேசியபோது, தனது மைக் அணைக்கப்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு என கூறினார்.

தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுந்து பேசும்போது, மோசடி பேர்வழிகள் என பா.ஜ.க. எம்.பி.க்களை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர் என குற்றச்சாட்டாக கூறினார்.

ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி போட்டு கொண்டு அவையில் சத்தம் எழுப்பினர். இந்த அமளிக்கு நடுவே, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டனர்.

எனினும், குறுகிய நேர விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இரு தரப்பினரும் அவையில், காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை முடங்கியது. இதனை அடுத்து, மீண்டும் இரு அவைகளும் தொடங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com