மணிப்பூர் கொடூரம் - டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு

மணிப்பூர் தொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் கொடூரம் - டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு
Published on

புதுடெல்லி,

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 பெண்களில் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளானார்.

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4-ந் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மே 18-ந் தேதி அன்று காங்போக்பி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ வெளியான பிறகுதான் அச்சம்பவமும், அதன் பின்புலமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் தொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், மணிப்பூர் வீடியோ தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com