

இம்பால்
மணிப்பூரில் பெண்கள் உதவியுடன் சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மணிப்பூரில் 2023-ம் ஆண்டு மெய்தி மற்றும் குகி என இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதில், 306 பேர் பலியானார்கள். 49 பேரை காணவில்லை.
வன்முறையை அடுத்து, ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ராணுவ படைகள் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்பின்னர், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வை சேர்ந்த ஒய்.கே. சிங் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
எனினும், அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுத விற்பனை நடக்கிறது என வெளியான தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தம்பல்னு சந்தை பகுதியில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை சட்டவிரோத வகையில் அவர் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலையில், 2 பெண்கள் மூலம் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு, அவருக்கு கையெறி குண்டு ஒன்றை விற்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதன்பின்னர் அவர் ஆந்திரோ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தவிர, நேற்று குகிமுன் கிராமத்தில் நடந்த சோதனையில், 2 இயந்திர துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், 7 ஒற்றை குழல் துப்பாக்கிகள், கையெறி குண்டு ஒன்று, வெடிகுண்டு மற்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.