

இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் சண்டேல் மாவட்டத்தில் உள்ள சக்பிகரோங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தலைச்சுற்றல், வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் இம்பாலில் உள்ள ஜே.என்.ஐ.எம்.எஸ்., ஆர்.ஐ.எம்.எஸ்., ஷிஜா மற்றும் பபினா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் கடந்த 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிப்பூர் முதல்-மந்திரி ஒய்.கே. சிங், நேற்று மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "ஷிஜா மருத்துவமனையில் 140-க்கு மேற்பட்டோரும், பபினா மருத்துவமனையில் 41-க்கு மேற்பட்டோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சண்டேல் மாவட்டத்திற்கு தேவையான மருந்துகளுடன் சிறப்பு மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.