

இம்பால்
மணிப்பூரில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. வங்ஜாகின் வால்தே என்பவரை மர்ம கும்பல் ஒன்று கடந்த 2023-ம் ஆண்டு மே 4-ந்தேதி கடுமையாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த பிப்ரவரி 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவருடைய மரணம் தொடர்பாக மணிப்பூரில் சில அமைப்புகள் நீதி கோரி வந்தன. இந்த நிலையில், ஜோமி குழுக்கள், குகி சமூக அமைப்புகள் மற்றும் மார் குழுக்கள் இணைந்து, சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 13 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன.
இதன்படி கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு உள்ளன. பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திபாய்முக், குவிதே உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலையின் குறுக்கே பெஞ்சுகளை போட்டு, யாரும் கடந்து செல்ல முடியாத வகையில் அமர்ந்திருந்தனர். வாகன போக்குவரத்து எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எம்.எல்.ஏ.வுக்கு நீதி கிடைக்க வேண்டி இந்த கடையடைப்பு நடத்தப்பட்டு உள்ளது என ஜோமி ஒருங்கிணைப்பு கமிட்டியின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
அவர் மறைந்து 60 நாட்கள் ஆகியும் எந்தவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. அதனால், அதிகாரிகளிடம் எங்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார். இந்த தருணத்தில், போலீசோ அல்லது பாதுகாப்பு படையினரோ எந்த பணியிலும் ஈடுபடவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
எனினும், தேவையான இடங்களில் ஆம்புலன்சுகள் உள்ளிட்ட அவசரகால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால், மருந்து கடைகள், தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட பிற சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.
இந்த முழு அடைப்பின்போது, வன்முறை சம்பவங்களோ அல்லது இடையூறுகளோ எதுவும் இன்றி மாவட்டம் அமைதியாக காணப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு தொடரும்.